வரலட்சுமி நோன்பு: சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
வரலட்சுமி நோன்பையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆனால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
சேலம்,
தரிசனத்துக்கு தடை
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கையாக மாவட்டத்தில் கோவில்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சுபமுகூர்த்த தினம் மற்றும் வரலட்சுமி நோன்பு ஆகியவை ஆகும். எனினும் சேலம் கோட்டை மாரியம்மன், சுகவனேசுவரர், கோட்டை பெருமாள், ராஜகணபதி உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் பலர் வெளியே நின்று தரிசனம் செய்தனர். ஆவணி சுபமுகூர்த்த தினங்களில் சுகவனேசுவரர் கோவிலில் ஏராளமான திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில் மூடப்பட்டதால் அங்கு வெறிச்சோடி காணப்பட்டது.
சிறப்பு பூஜை
மேலும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். வரலட்சுமி நோன்புயொட்டி சேலம் மாநகரில் பல்வேறு அம்மன் கோவிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் அம்மன் வெள்ளிக்கவசம், மஞ்சள் மற்றும் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தார்.
சேலம் பழைய பஸ்நிலையம் அருகே கந்தாரி மீனாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் மற்றும் வனபத்ரகாளியம்மனுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிற்றால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம் நெத்திமேடு, தண்ணீர்பந்தல் மகா காளியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செயப்பட்டு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story