சேலம் அருகே பரிதாபம் லாரி மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி


சேலம் அருகே பரிதாபம் லாரி மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2021 2:43 AM IST (Updated: 21 Aug 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்
கூலித்தொழிலாளி
சேலம் திருமலைகிரி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பசுபதி (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகா (28). இவர்களுக்கு சுபிஷ் (6) என்ற மகனும், திவ்யா (3) என்ற மகளும் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் உள்ள பசுபதியின் அக்காள் பிரியா வீடு உள்ளது. இதனால் அவரது வீட்டுக்கு நேற்று மாலை 4 மணிக்கு பசுபதி தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர்களது 2 குழந்தைகளையும் உடன் அழைத்து செல்லவில்லை.
இதையடுத்து நடுப்பட்டியில் உள்ள அக்காள் குடும்பத்தினரை பார்த்துவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். அப்போது, அவரது அக்காள் மகள் மோகனப்பிரியாவை (10) உடன் அழைத்து வந்துள்ளார். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, முன்னால் மினி லாரி ஒன்று சென்றது. 
3 பேர் பலி
அந்த மினி லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பசுபதி மோட்டார் சைக்கிளுடன் அந்த மினி லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பசுபதி, அவருடைய மனைவி கார்த்திகா மற்றும் உறவினர் மகள் மோகனப்பிரியா ஆகிய 3 பேரும் நடுரோட்டில் வலது புறமாக விழுந்தனர். அந்த சமயத்தில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
கதறி அழுதனர்
இதனிடையே, விபத்தில் இறந்த பசுபதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இறந்த பசுபதி, கார்த்திகா, சிறுமி மோகனப்பிரியா ஆகிய 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். 
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story