உண்டு உறைவிட பள்ளிகளில் சர்வதேச தரத்தில் கல்வி கற்பிக்கப்படும்; பசவராஜ் பொம்மை பேச்சு
கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் சர்வதேச தரத்தில் கல்வி கற்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
வேலை வாய்ப்புகள்
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தேவராஜ் அர்ஸ் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பெயரிலான விருது வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தகுதியானவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச தரத்திலான கல்வி அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். தரமான கல்வியை பெறுபவர்கள் சொந்த தொழில் செய்யலாம் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
கல்வி உதவித்தொகை
பொது நுழைவு தேர்வு மற்றும் நீட் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த 8½ லட்சம் மாணவர்களுக்கு ரூ.625 கோடி கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் சொந்த தொழில் செய்யவும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுயதொழில் செய்ய ரூ.83 கோடி நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆதிவாசி மக்களின் குழந்தைகளுக்காக 3 உண்டு உறைவிட பள்ளிகள் திறக்கப்படும். ஏற்கனவே 4 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்படும். நிலத்தை உழுபவர்களே அதன் உரிமையாளர்கள் என்ற சட்டத்தை கொண்டு செயல்படுத்தியவர் தேவராஜ் அர்ஸ்.
சுயமரியாதைக்கு பங்கம்
இதனால் சிலரிடமே இருந்த சொத்துகள் அனைவருக்கும் கிடைத்தது. நில பிரச்சினை தொடர்பாக அதிக எண்ணிக்கையில் புகார்கள் போலீசாருக்கு வருகின்றன. தேவராஜ் அர்ஸ் கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டத்தின் மூலம் நாம் பாடம் கற்க வேண்டும். அவரது ஆட்சி காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் முடிவுகள் எடுக்கப்பட்டன.
சில நீர் மின்சார உற்பத்தி திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார். சிறிய சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு கூட அரசியல் அதிகாரத்தை அவர் வழங்கினார். அதன் மூலம் அந்த சமுதாயங்கள் முன்னேற்றம் அடைந்தன. சுயமரியாதைக்கு பங்கம் வந்தபோது, தனது பதவியையே தூக்கி எறிந்தவர் தேவராஜ் அர்ஸ். அவரது பாதையில் நாம் பயணிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story