பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆய்வு கூட்டம்
1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
ஆய்வு கூட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், வருகிற 1-ந் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டா் அரவிந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை முதன்மை கல்வி அதிகாரியிடம் பெற வேண்டும். இதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் வளாகங்கள் தூய்மை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கிருமி நாசினி
கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம் மற்றும் இதர பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவறை, குடிநீர்தொட்டி மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி போன்றவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளில் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கவும், பள்ளி வளாகங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைத்திடவும், கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்திடவும் அறிவுறுத்த வேண்டும்.
50 சதவீத மாணவர்கள்
மாணவர்களின் வருகை முதல் நாளில் 50 சதவீதமும், 2-ம் நாளில் மீதமுள்ள 50 சதவீத மாணவர்கள் என்ற நெறிமுறையின்படி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story