இந்திய ராணுவத்தை பலப்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்க வேண்டும்; வெங்கையா நாயுடு பேச்சு


இந்திய ராணுவத்தை பலப்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்க வேண்டும்; வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 21 Aug 2021 3:04 AM IST (Updated: 21 Aug 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவத்தை பலப்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்க வேண்டும் என்று எச்.ஏ.எல். நிறுவனத்தை பார்வையிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

பெங்களூரு:

உள்கட்டமைப்புகள்

  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார சுற்றுப்பயணமாக கடந்த 16-ந் தேதி கர்நாடகம் வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அவர் தனது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.
  அங்கு தயாரிக்கப்படும் எல்.சி.எச்., ஏ.எல்.எச்., எல்.சி.ஏ. வகை போர் விமானங்களின் பிரிவை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு அவர் அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது:-

  நமது நாட்டை சுற்றிலும் புவிசார்-அரசியல் சிக்கல்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தை பலப்படுத்த சொந்தமாக அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நான் இங்குள்ள விமானவியல் மற்றும் பாதுகாப்பு துறை பிரிவுகளில் உள்ள உள்கட்டமைப்புகளை பார்வையிட்ட பிறகு, நமது நாட்டின் பாதுகாப்பு உறுதியாக உள்ளது என்று உறுதி அளிக்கிறேன்.

தன்னிறைவு அடைய வேண்டும்

  இந்த நிறுவனத்தில் அரசு-தனியார் பங்களிப்பில் பல்வேறு விமான தயாரிப்பு திட்டங்கள் நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் ராணுவம் மற்றும் போர் விமான தயாரிப்பில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நமது நாட்டின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் பங்காற்ற வேண்டியது அவசியம். உலக அளவில் தலைமை வகிக்கும் பண்புகள் எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு உள்ளது.

  இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை கடந்த 80 ஆண்டுகளில் நாட்டிற்கு அளித்துள்ள பங்களிப்பு பெருமை அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் சொந்த தயாரிப்பான எல்.சி.ஏ. போர் விமானங்களின் உற்பத்தியை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு துறையை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

போர் விமானங்கள்

  அதைத்தொடர்ந்து பேசிய கவர்னர் கெலாட், "எச்.ஏ.எல். ஒரு சிறப்பு வாய்ந்த போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம். இங்கு பல்வேறு வகையான விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்வேறு திட்டங்களில் இந்த நிறுவனம் வழிநடத்துபவராக மாறியுள்ளது. இந்த நிறுவனம் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன” என்றார்.

Next Story