மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு
மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஏசுதாஸ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன் ஆகியோர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அங்கு பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் அங்கு அமருவதற்கு கருங்கல்லில் அமைக்கப்பட்ட இருக்கைகள் சில உடைந்தும், கீழே விழுந்தும் காணப்பட்டன. அதனை பார்வையிட்ட அவர் கற்சிற்பங்களுக்கு பெயர் போன மாமல்லபுரத்தில் இங்குள்ள பஸ் நிலையத்தில் தரமான முறையில் அதே கருங்கல்லில் சேதமடைந்த இருக்கைகளை மாற்றி புதிய இருக்கைகள் அமைக்க உத்தரவிட்டார்.
அதேபோல் அங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்ட நவீன கழிவறையை பார்வையிட்ட அவர், அங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வழிகள் அமைத்து கதவுகள் பொருத்துமாறு உத்தரவிட்டார். பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் மையத்தையும் பார்வையிட்டார். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் வரும் பயணிகளில் தேவைக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பிறகு மாமல்லபுரம் முத்தமிழ் அரங்கில் மழை, பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்கள் அங்கு தங்க வைப்பதற்காக அங்குள்ள அறைகள், உள்அரங்கு பகுதிகளில் காற்றோட்டம், சுகாதாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளனவா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது. தேவனேரியில் சுனாமி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் குறைகளையும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் வருவாய் துறையினருடன் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு கேட்டறிந்தனர்.
அவருடன் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story