ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி சாவு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 21 Aug 2021 9:01 PM IST (Updated: 21 Aug 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி:

 தோட்டத்து வீடு 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் வத்தக்கவுண்டன்வலசு என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் என்ற முருகேசன் (வயது 52). விவசாயி. இவர், பழனி உழவர்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். 

அவருடைய மனைவி வளர்மதி (42). இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) என்ற மகனும் இருந்தனர். பி.ஏ., பி.எட் படித்துள்ள சிவரஞ்சனி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். 

கார்த்திகேயன், பழனியில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சின்ராஜிக்கு, வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் சொந்த தோட்டம் உள்ளது. அந்த ேதாட்டத்து வீட்டில் தான், சின்ராஜ் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 சோளத்தட்டையில் தீ 

தனது தோட்டத்தில் முருங்கை, கறிவேப்பிலை, மாட்டுத்தீவனப்புல் ஆகியவற்றை சின்ராஜ் பயிரிட்டிருந்தார். மாடுகளையும், பாதுகாப்புக்காக நாய் ஒன்றையும் அவர் வளர்த்து வந்தார்.

சின்ராஜ் வீட்டில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில், மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் சோளத்தட்டை படப்பு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் அந்த சோளத்தட்டை படப்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சின்ராஜ் வளர்த்த நாய் குரைத்து கொண்டே இருந்தது.

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, சின்ராஜின் பக்கத்து தோட்டத்து வீட்டில் வசிக்கிற அவருடைய அண்ணன் மகன் சிவபிரகாஷ் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தனது சித்தப்பா வீட்டு தோட்டத்தில் சோளத்தட்டை படப்பு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 4 பேர் உடல் கருகி சாவு

இதுகுறித்து தகவல் தெரிவிக்க, தனது சித்தப்பா குடும்பத்தினரின் செல்போன் எண்களில் சிவபிரகாஷ் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.  

இதனால் சிவபிரகாஷ் மற்றும் அக்கம்பக்கத்து தோட்டத்துக்காரர்களுடன் சின்ராஜ் தோட்டத்துக்கு சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லை. இதனையடுத்து சோளத்தட்டையில் பற்றி எரிந்த தீயை, அருகே உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

அப்போது சோளத்தட்டைக்குள் அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை பதற செய்தது. அதாவது உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டைகளான நிலையில் சின்ராஜ், அவருடைய மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோர் பிணமாக கிடந்தனர். 

 போலீஸ் ஐ.ஜி. விசாரணை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, ஆயக்குடி இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். 

சம்பவம் பற்றி அறிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 
 மோப்பநாய் சோதனை 

திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சின்ராஜ் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள், ரேகைகள் சேகரிக்கப்பட்டன. 

மேலும் மோப்பநாய் ‘ரூபி' வரவழைக்கப்பட்டது. அது, சின்ராஜின் வீடு மற்றும் உடல்கள் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்தபடி அந்த பகுதியில் சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

இதற்கிடையே சின்ராஜ் உள்பட 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

காரணம் என்ன? 

பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக சின்ராஜின் வீட்டு அறையில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனால் அவர்கள் கொலை செய்யப்பட்டு, உடல்களை தூக்கி சென்று சோளத்தட்டை படப்பில் போட்டு தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

அதேநேரத்தில் சின்ராஜ் தனது மனைவி, மகள், மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

  போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், கொள்ளைக்காக சின்ராஜ் உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்டார்களா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினோம். ஆனால் அவருடைய வீட்டில் நகை, பணம் எதுவும் திருட்டு போகவில்லை. 

எனவே சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் குறித்து விரைவில் புலனாய்வு செய்து சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்றார்.

Next Story