நாகை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை
நாகை மாவட்டத்தில் மழை கொட்டித்தீர்த்ததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மழை கொட்டித்தீர்த்ததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
கொட்டித்தீர்த்த மழை
நாகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாகையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதையடுத்து காலை 11 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது.
இந்த திடீர் மழையால் சாலையில் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் நின்றது. குறிப்பாக நாகை பழைய பஸ் நிலையம் அருகே நேதாஜி ரோடு, கூப்பர் தெரு ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் மழைநீர் புகுந்தது.
ஓட்டலுக்குள் தண்ணீர் புகுந்தது
இதையடுத்து ஓட்டலில் இருந்து மழைநீரை வாலி மூலம் வெளியே ஊற்றினர்.அதேபோல அக்கரைப்பேட்டை செல்லும் மேம்பாலம் அருகே உள்ள சால்ட் ரோட்டில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர், மழைநீருடன் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்த மழையால் நாகையில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்வேளூர்
இதேபோல கீழ்வேளூர், சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், சங்கமங்கலம், கோகூர், வடகரை, ஆணைமங்கலம், ஒக்கூர், வெங்கிடங்கால், ஆவராணி, புதுச்சேரி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை. குருக்கத்தி, கூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள வயல்களில் நெற்பயிர்கள் வளர உரிய நேரத்தில் மழை பெய்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமருகல்
திருமருகல், திட்டச்சேரி, திருப்புகலூர், ஏனங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story