60 மூட்டை சோளம் திருடிய 2 பேர் கைது
விளைபொருள் சேமிப்பு கிடங்கில் 60 மூட்டை சோளம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே வேளாண் விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் விளைபொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டு இருந்த, 60 மூட்டை சோளத்தை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவில் சேமிப்பு கிடங்கின் பூட்டை உடைத்து சோள மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ராஜசேகர் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 31), முத்தனம்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணி (36) ஆகியோர் சோள மூட்டைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடிய 60 சோள மூட்டைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story