ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
வாட்ஸ்-அப் மூலம் தம்பிக்கு தகவல் தெரிவித்து விட்டு, ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னாளபட்டி:
வாட்ஸ்-அப் மூலம் தகவல்
திண்டுக்கல் அருகே உள்ள அம்பாத்துரை ஊராட்சி கதிரிபட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் குமரேசன் (வயது 27). பாலிடெக்னிக் படித்துள்ள இவர், துபாய் நாட்டில் வேலை செய்தார். கடந்த 9 மாதத்துக்கு முன்பு குமரேசன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் விவசாய பணியில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகே முருகம்பட்டியில் உள்ள ரெயில்வே குகை தண்டவாள பகுதிக்கு குமரேசன் வந்தார்.
பின்னர் அங்கிருந்தபடி தனது தம்பி தாமோதரனின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினார். அதில், ‘தம்பி எனக்கு வாழ பிடிக்கவில்லை. நம் குடும்பத்தை நீ பார்த்து கொள். நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
சிறிதுநேரத்தில் அந்த வழியாக, மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ரெயில் முன் பாய்ந்து குமரேசன் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வாட்ஸ்-அப் தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குமரேசனை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மறுநாள் காலையில், சம்பவ இடத்தில் ரெயிலில் அடிபட்டு குமரேசன் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரேசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story