சுற்றுலா தலங்களில் தடையை மீறும் பயணிகள்
பைன்பாரஸ்ட், மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் தடையை மீறுகின்றனர். அவர்கள் வேலியை தாண்டி சென்று, அங்கு உலா வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டும், சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் 4 மாதங்களாக சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக தொடர் விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
அதன்படி நேற்று முன்தினம் மொகரம் பண்டிகை, நேற்று ஓணம் பண்டிகை என்பதால் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊட்டியில் அரசு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்ததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள சுற்றுலா தலங்களை சாலையில் நின்றபடியும், அனுமதி இன்றி உள்ளே நுழைந்தும் கண்டு ரசித்து வருகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட் சுற்றுலா தலத்தில் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதை தாண்டி உள்ளே நுழைந்த சுற்றுலா பயணிகள் மரங்களுக்கு நடுவே நின்றபடி தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இருக்கைகளில் அமர்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
காமராஜ் சாகர் அணையை பார்வையிட்டு செல்பி எடுத்துக்கொண்டனர். சூட்டிங்மட்டம் அருகே வாகன நிறுத்தும் இடத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு பசுமையான புல்வெளியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அங்கு குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோல் சாண்டிநல்லா பகுதியில் உள்ள மரவியல் பூங்காவுக்குள் அனுமதியின்றி உள்ளே சென்று சுற்றி பார்த்தனர். கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதியில்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் தடையை மீறி உள்ளே நுழைந்து சுற்றி பார்த்து வருகின்றனர்.
மேலும் சரியாக முககவசம் அணியாததால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story