சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் கள்ளக்குறிச்சியில் கொட்டும் மழையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது


சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் கள்ளக்குறிச்சியில் கொட்டும் மழையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது
x
தினத்தந்தி 21 Aug 2021 10:30 PM IST (Updated: 21 Aug 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கொட்டும் மழையில் கலெக்டர் ஸ்ரீதர் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி, 

பலத்த மழை

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வலுவிழந்த காரணத்தினால் ஏற்பட்ட வெப்பசலனம் காரணமாக வடகடலோர மாவட்டங்கள், வட உள்மாவட்டங்களில் நேற்று காலை முதல் மழை பெய்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சியில் நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனிடையே கள்ளக்குறிச்சி நகரில் பல்வேறு இடங்களில் சாலையேரம் உள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து துருகம் சாலை, பஸ் நிலையம், அண்ணாநகர்-தென்கீரனுர் செல்லும் சாலை மற்றும் தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

கலெக்டர் ஆய்வு

இதையறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று காலை 8 மணிளவில் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி நகராட்சி அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது பஸ் நிலையம் அருகே உள்ள பழைய மாரியம்மன் கோவில் பகுதி, துருகம் சாலை, அபிராமி அபார்ட்மென்ட் பகுதி மற்றும் கழிவுநீர் வாய்க்கால் இறுதியாக முடியும் நகராட்சி மயானம், கோமுகி ஆறு பாலம் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே வாய்க்கால்களில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், முட்செடிகள், குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் சில இடங்களில் வாய்க்காலகள் மண்ணால் தூர்ந்து போய் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதைபார்த்த கலெக்டர் ஸ்ரீதர், வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகளை உடனடியாக சரி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு, கழிவுநீர், மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இருப்பினும் ஓரிரு இடங்களில் குப்பைகளால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலங்களில் கழிவுநீர் வாய்க்கால், மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் நகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்களை பயன்படுத்தி அடைப்பு ஏற்படாதவாறு  முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள நகாரட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் குமரன், பொறியாளர் பாரதி, ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story