போலீஸ் என்று கூறி காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறிப்பு கோட்டக்குப்பத்தில் பதுங்கி இருந்தவர் சிக்கினார்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், போலீஸ் என்று கூறி காதல் ஜோடிகளை மிரட்டி நகைகளை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம், கோட்டக்குப்பம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலீஸ் என்று கூறி காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது.
இச்சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளியை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் ஏட்டுகள் மணிமாறன், பிரதீப்குமார், தீனதயாளன், ராஜசேகரன், சத்யராஜ், போலீஸ்காரர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார், வழிப்பறி கொள்ளையனை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் பழைய குற்றவாளிகளின் பட்டியல்களை தயார் செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
கைது
இதில் ஏற்கனவே இதுபோன்ற பல குற்ற செயல்களில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா சின்னகாப்பான்குளம் மேலத்தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் சிவராமன் (வயது 42) என்பவர் ஈடுபட்டிருப்பதும், அவர் கோட்டக்குப்பம் பகுதியில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கோட்டக்குப்பத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்கிருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற சிவராமனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், தன்னை போலீஸ் என்று கூறிக்கொண்டு விழுப்புரம், கோட்டக்குப்பம் பகுதிகளில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
10 பவுன் நகைகள் மீட்பு
அதனை தொடர்ந்து சிவராமனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான சிவராமனை போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான சிவராமன் மீது ஏற்கனவே விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையன் சிவராமனை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பாராட்டினார்.
Related Tags :
Next Story