காணாமல் போனவர்கள் தொடர்பாக 2371 வழக்குகள் பதிவு


காணாமல் போனவர்கள் தொடர்பாக 2371 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 21 Aug 2021 10:38 PM IST (Updated: 21 Aug 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 7 ஆண்டுகளில் திருப்பூர் மாநகர் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 2371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனுப்பர்பாளையம்
கடந்த 7 ஆண்டுகளில் திருப்பூர் மாநகர் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 2,371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
2,371 வழக்குகள் பதிவு 
திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் சேர்க்கும் நிகழ்ச்சி சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூடுதல் துணை கமிஷனர் மோகன் வரவேற்றார். துணை கமிஷனர் அரவிந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமை தாங்கி பேசியதாவது:-
 பெண் குழந்தைகளுக்கு மட்டும் பாதுகாப்பு தேவைப்படும் காலம் அல்ல இது. ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேவைப்படும் காலம். அனைத்தையும் போலீசார்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அனைவருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது.  கடந்த 3 மாதங்களாக காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 8 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 2,371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,155 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
பெற்றோரிடம் ஒப்படைப்பு
மேலும் 2019-ம் ஆண்டு 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 246 நபர்களும், 2020-ம் ஆண்டு 290 வழக்குகளில் 269 நபர்களும், 2021-ம் ஆண்டு இதுவரை 223 வழக்குகளில் 183 நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் காணாமல் போனதாக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 71 வழக்குகளில் காணாமல் போன நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 சிறுவர்கள், 12 சிறுமிகள் உள்ளிட்ட 15 குழந்தைகளை தனிப்படை போலீசார் மீட்டு, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலமாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். 
முன்னதாக காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட நபர்களுக்கு போலீஸ் கமிஷனர் வனிதா நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாரை கமிஷனர் வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காணாமல் போனவர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story