வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு
வினாடிக்கு 1,700 கனஅடி நீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. 3 நாளில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும்.
இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கீழணைக்கு வந்தது. 9 அடியை கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் 7.50 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நீர்மட்டம் 46 அடியாக உயர்வு
இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில் 40 அடியை எட்டியதும் கடந்த வாரத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடங்கியது. கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் நேற்று நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது.
வினாடிக்கு 1,700 தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை 3 நாட்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரி நிரம்ப உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரியின் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story