பலத்த காற்றுடன் மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது.
காலையிலேயே வழக்கம்போல சுட்டெரிக்கும் வெயில் அடிக்கத்தொடங்கிய நிலையில் 12 மணி அளவில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக மாறியது. இதனை தொடர்ந்து பலத்த இடி மின்னலுடன் ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டத்தொடங்கியது. பலத்த காற்றுடனும் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்தரி வெயில் முடிவடைந்த பின்னரும் 3 மாதமாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கடும் வெப்பம் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி அடைந்தனர். பகலில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு இந்த வெயில் அடித்ததால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர்.
மேலும், ஆடி மாத காற்றும் இந்த முறை சரியாக அடிக்காத தால் வெப்பகாற்றுடன் மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் வெப்பநிலை மாறி குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பல பகுதிகளில் மக்கள் இந்த மழைநீரை பாத்திரங்களிலும் வாளிகளிலும் பிடித்து சமையலுக்கு பயன்படுத்த சேகரித்தனர். சுமார் ஒரு மணி நேரம் ெபய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி நின்றது.
மரம் சாய்ந்தது
.ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெரு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றினர்.
Related Tags :
Next Story