ஆழ்துளை கிணறு அமைத்தபோது இரும்பு குழாய் விழுந்து தச்சு தொழிலாளி சாவு


ஆழ்துளை கிணறு அமைத்தபோது இரும்பு குழாய் விழுந்து தச்சு தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 22 Aug 2021 12:17 AM IST (Updated: 22 Aug 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்தபோது இரும்பு குழாய் தவறி விழுந்ததில் தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குமாரபாளையம்:
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
குமாரபாளையம் புதுபள்ளிபாளையம் ரோடு ஆறுமுகம் லைனில் வசித்து வந்தவர் சக்கரபாணி (வயது 62). தச்சு தொழிலாளி. இவருக்கு குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் வேளாங்காட்டார் நகரில் இடம் உள்ளது. இந்த இடத்தில் அவர் புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். 
அதன்படி அங்கு நேற்று காலை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின்போது திடீரென ரிக் வண்டி பழுதானது. இதனை தொழிலாளர்கள் சீரமைத்து கொண்டிருந்தனர். சக்கரபாணி அங்கு சென்று அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். 
சாவு
அப்போது திடீரென ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் தவறி அவர் தலையில் விழுந்தது. இதில் சக்கரபாணி பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சக்கரபாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்ட ஈரோடு மாவட்டம் அத்தாணி பகுதியை சேர்ந்த ரிக் வண்டி ஆபரேட்டர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Next Story