ரூ.4 லட்சம் கேட்டு தகராறு: நடுரோட்டில் தாயை அடித்து, உதைத்த மகன் கைது-சமூகவலைதளங்களில் பரவும் காட்சிகளால் பரபரப்பு
நடுரோட்டில் தாயை அடித்து, உதைத்த மகன் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஊஞ்சப்பாளையம் அருகே உள்ள பொன்னேரிப்பட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவருக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நல்லம்மாள் கணவர் இறந்து விட்ட நிலையில் அங்கு தனியாக வசித்து, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.
இவர் நேற்று வழக்கம் போல் கூலிவேலைக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை சண்முகம், இவருடைய மனைவி ஜானகி, உறவினர் பாலசுப்பிரமணி ஆகியோர் வழி மறித்து ரூ.4 லட்சம் கேட்டு தகராறு செய்தனர். நல்லம்மாள் பணம் தர மறுத்ததால் சண்முகம் ஆத்திரமடைந்து, திடீரென அவரை நடுரோட்டில் அடித்து, உதைத்தார். மேலும் ரோட்டில் தரதரவென அவரை இழுத்து சென்றும் தாக்கினார்.
இதனை பார்த்த நல்லம்மாளின் வளர்ப்பு நாய் சண்முகத்தை கடிக்க முயன்றது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் ஜானகி, பாலசுப்பிரமணி ஆகியோரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story