வீட்டில் டெட்டனேட்டர்களை புதைத்து வெடிக்க செய்து மகள் குடும்பத்தினரை கொல்ல முயற்சி


வீட்டில் டெட்டனேட்டர்களை புதைத்து வெடிக்க செய்து மகள் குடும்பத்தினரை கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 22 Aug 2021 12:39 AM IST (Updated: 22 Aug 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே நிலப் பிரச்சினை காரணமாக வீட்டில் டெட்டனேட்டர்களை புதைத்து வெடிக்க வைத்து மகள் குடும்பத்தினரை கொலை செய்ய முயன்ற தந்தை உள்பட 5 ேபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே நிலப் பிரச்சினை காரணமாக வீட்டில் டெட்டனேட்டர்களை புதைத்து வெடிக்க வைத்து மகள் குடும்பத்தினரை கொலை செய்ய முயன்ற தந்தை உள்பட 5 ேபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலப் பிரச்சினை

திருப்பத்தூரை அடுத்த நரியனேரி அருகில் உள்ள கொண்டகிந்தனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் நரசிம்மன் (வயது 45), மாங்காய் ஒட்டுச்செடி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (52). இவருடைய 2-வது மனைவியான வளர்மதிக்கு பிறந்த மகள் அனிதா. 
நரசிம்மனுக்கும், அனிதாவுக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ராஜா தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றார். அந்த நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நரசிம்மன் ரூ.45 லட்சம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த நிலத்தை, ராஜா தன்னிடம் விற்கும்படி நரசிம்மனிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெட்டனேட்டர்கள் புதைப்பு 

நிலத்தை தன்னிடம் விற்காத நரசிம்மன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய ராஜா சதித்திட்டம் தீட்டினார். அதன்படி ராஜா, அவரின் மகன்களான யுவராஜ், கார்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு யாருக்கும் தெரியாமல் நரசிம்மன் வீட்டுக்கு வந்தனர். 
அங்கு வீட்டில் பல்வேறு பகுதிகளில் குழிதோண்டி, அந்தக் குழிகளில் 30-க்கும் மேற்பட்ட 

டெட்டனேட்டர்களை (வெடிப்பொருள்) வைத்து மண்ணை போட்டு மூடி உள்ளனர். டெட்டனேட்டர்களை புதைத்து வைத்துள்ள இடங்களில் இருந்து மின்வயர்களை அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மருக்கு எடுத்துச் சென்று இணைப்பு கொடுக்க முயன்றுள்ளனர். 

கூச்சலிட்டு ஓடி விரட்டினார்

நேற்று அதிகாலை 3 மணியளவில் நரசிம்மன், வீட்டின் மாடியில் ஆள் அரவம் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த நரசிம்மனின் தந்தை சேட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது ராஜா, அவரின் மகன்கள் அங்கிருந்து ஓடியது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டபடி ஓடிவந்து விரட்டினார். ஆனால் அவர்கள் தப்பியோடி விட்டனர். 

சந்தேகமடைந்த சேட்டு தனது வீட்டை சுற்றிப் பார்த்தார். வீட்டின் பகுதியில் இருந்து நீளமான மின்வயர்கள் அங்குள்ள டிரான்ஸ்பார்மர் வரை கிடந்ததும், அங்கு சில டெட்டனேட்டர்கள் சிதறிக் கிடந்ததும் தெரிய வந்தது.
5 பேர் கைது

இதுகுறித்து சேட்டு கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கந்திலி போலீசாரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சேட்டுவின் வீட்டை சோதனையிட்டனர். வீட்டின் உள்பகுதியிலும், வெளியிலும் டெட்டனேட்டர்கள் புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சொத்துப் பிரச்சினை காரணமாக நரசிம்மன் குடும்பத்தினரை டெட்டனேட்டர்களை வைத்து கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. ஆனால், அப்பகுதியில் திடீெரன மழை பெய்ததால் டெட்டனேட்டர்கள் வெடிக்காமல் செயலிழந்தது தெரிய வந்தது. இதனால் நரசிம்மன், அனிதா மற்றும் 3 குழந்தைகள், சேட்டு ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டகிந்தனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜா, அவரின் மகன்கள் யுவராஜ் (28), கார்த்தி (23), டெட்டனேட்டர்களை வழங்கிய அந்தக் கிராமத்தைச் சோ்ந்்த விஜயகுமார் (53), இவரின் தம்பி முனிசாமி (31) ஆகிய 5 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

ராஜா, தனது 2-வது மனைவிக்கு பிறந்த மகளான அனிதா மற்றும் மருமகனை சொத்துப் பிரச்சினை காரணமாக வீட்டில் வெடி வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story