மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை


மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2021 2:31 AM IST (Updated: 22 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பதால், குமரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

திருவட்டார், 
மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பதால், குமரி விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
வாழைப்பழம்
தமிழ்நாட்டில் விளையும் வாழை பழங்களில் பெரும் பாலானவை விளையும் மாவட்டம் குமரி என்றால் மிகையில்லை. குமரி மாவட்டத்தில் செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோட்டை, பேயன், சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. 
மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்புசக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல் பொதுவாக மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்புச் சுவையும் மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட் டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைபழத்தை நசுக்கி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
நேருவுக்கு பிடித்த பழம் 
மட்டி வாழையை நட்ட 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும், அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் முனைப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது.
மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். விருந்தில் அவருக்கு குமரி மாவட்ட ஸ்பெஷல் மட்டிப்பழம் வழங்கப்பட்டது. சாப்பிட்டுப்பார்த்த அவர், ”ஆஹா..ஆஹா. அருமை..இவ்வளவு ருசியான வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை!” என மகிழ்ந்ததாக கூறுவார்கள். அதன்பின்பு பலமுறை அவருக்கு குமரி மாவட்ட மட்டிப்பழம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்டது.
தற்போது சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் குமரி மாவட்ட மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.
மண் 
முள்ளங்கினா விளையில் மட்டி, செம்மட்டி, ஏத்தன் உள்பட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட வாழை ரகங்களை பயிரிட்டு வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், விவசாயியுமான ஜோ பிரகாஷ் கூறியதாவது:-
நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்னுடைய 35 சென்ட் தோட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட வாழை ரகங்களை பயிரிட்டு வருகிறேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில்தான் வாழை பயிரிட்டுள்ளேன். மட்டி வாழைகள் அதிகமாக பயிரிட்டுள்ளேன். மட்டி, செம்மட்டி ஆகிய ரகங்கள் என்னிடம் உள்ளன. மருத்துவ குணம் மிக்க மட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் பெருமையைச்சொல்லும் வாழை எனலாம். வேறு எந்த மாவட்ட மண்ணிலும் மட்டி அதிக அளவில் உற்பத்தி ஆவது இல்லை. குமரி மாவட்டத்தின் மண் மட்டி வாழைகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு அளித்திருக்க வேண்டும். தாமத மானாலும் தற்போதாவது இந்த வாழைக்கு புவிசார் குறியீடு அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது என்னைப்போன்ற வாழையை விரும்பும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மட்டிப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story