பெலகாவி, கலபுரகி, உப்பள்ளி ஆகிய 3 மாநகராட்சிகள் தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதி; நளின்குமார் கட்டீல் பேட்டி


பெலகாவி, கலபுரகி, உப்பள்ளி ஆகிய 3 மாநகராட்சிகள் தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதி; நளின்குமார் கட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2021 2:54 AM IST (Updated: 22 Aug 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி, உப்பள்ளி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு நடக்கும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  கலபுரகியில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதா வெற்றி உறுதி

  ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்த விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. அதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிந்தது எல்லாம், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது, மக்களை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்துவது மட்டுமே.

  பா.ஜனதாவுக்கு எதிராக மக்களை திசை திருப்புவது மட்டுமே காங்கிரஸ் தலைவர்களின் வேலையாக உள்ளது. அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி வருகிறார்கள். பெலகாவி, கலபுரகி, உப்பள்ளி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. 3 மாநகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றும்.

ஜோதிடர் இல்லை

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற நாளில் இருந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். வளர்ச்சி பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் முதல்-மந்திரியான பின்பு பல்வேறு துறைகள் வேகமாக வளர்ந்து வருகிறது. பசவராஜ் பொம்மை ஆட்சியில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை பசவராஜ் பொம்மை சமாதானப்படுத்துவார்.

  பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி நீண்ட நாட்களாக நீடிக்க போவதில்லை என்று சித்தராமையா கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. அவர் ஜோதிடர் இல்லை. அவர் சொல்வதை காங்கிரஸ் தலைவர்களே கேட்பதில்லை. பசவராஜ் பொம்மை இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வார்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story