பெங்களூருவில் ரவுடி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில், கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ்காரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கொலை முயற்சி
பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அவினாஷ். ரவுடியான இவர் மீது சஞ்சய்நகர், ராமமூர்த்திநகர், எலகங்கா ஆகிய போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் அவினாசை போலீசார் தேடிவந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகம் முன்பு ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்த ராமமூர்த்திநகரை சேர்ந்த முனிராஜ்(வயது 55) என்பவரை, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருந்தனர். இந்த தாக்குதலில் முனிராஜ் பலத்த காயம் அடைந்தார். மேலும் தன்னை கொல்ல முயன்றதாக 3 பேர் மீதும் முனிராஜ், சஞ்சய்நகர் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
அப்போது முனிராஜை கொல்ல முயன்றது ரவுடி அவினாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதனால் முனிராஜையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய சஞ்சய்நகர் போலீசார் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் அவினாஷ், குட்டேதஹள்ளியில் உள்ள ஒரு மைதானம் அருகே பதுங்கி இருப்பதாக சஞ்சய்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று அதிகாலை குட்டேதஹள்ளிக்கு சென்ற சஞ்சய்நகர் போலீசார் அங்கு பதுங்கி இருந்த அவினாசை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை ஜீப்பில் ஏற்ற முயன்றனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ்காரர் சந்தோஷ் என்பவரை, அவினாஷ் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
சுட்டுப்பிடிப்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவினாஷ் சரண் அடைய மறுத்ததுடன் போலீஸ்காரர்களை மீண்டும் தாக்க முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் அவினாசை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அவினாசின் வலது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுபோல அவினாஷ் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சந்தோசும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story