கர்நாடகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் தைரியமாக பள்ளிக்கு வரும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு:
நாளை பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 23-ந் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான (பி.யூ.சி 2-ம் ஆண்டு) பள்ளிகள் திறக்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது. அந்த மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்றால், அங்கு பள்ளிகளை திறக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்
பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கொரோனா காரணமாக மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதத்தை கண்டிப்பாக பெற்று வர வேண்டும். வீட்டில் இருந்தே உணவு மற்றும் தண்ணீர் எடுத்து வரவேண்டும். மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிவதுடன், வகுப்பறையில் இருக்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதுபோல்,தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வருவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஏதேனும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அந்த பள்ளிகள் ஒரு வாரம் மூடப்படும். ஒருவாரத்திற்கு பின்பே அந்த பள்ளிக்ள திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆதங்கப்பட வேண்டாம்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, வருகிற 23-ந் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான (பி.யூ.சி.) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கல்வித்துறை எடுத்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பள்ளிகள் திறப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் கொரோனா விதிகளை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் ஆதங்கப்பட தேவையில்லை.
ஆகவே மாணவர்கள் தைரியமாக பள்ளிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன். பள்ளிகள் திறப்பையொட்டி அன்றைய தினம் பெங்களூருவில் சில பள்ளிகளுக்கு நான், பள்ளிக்கல்வித் துறை மந்திரியுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தவும் முடிவு செய்துள்ளேன். கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நானே ஆய்வு செய்ய இருக்கிறேன். ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தடுப்பூசி போட வேண்டும்
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் சமூக இடைவெளி விட்டு, வகுப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்க இருக்கைகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பெற்றோரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பள்ளி முடிந்து வந்த பின்பு தங்களது பிள்ளைகளின் உடல் நலம் குறித்து அனைத்து பெற்றோர்களும் பரிசோதிக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். எந்த விதமான அச்சமும் இன்றி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிகளை திறப்பதில் ஆர்வம் காட்டி வருவதுடன், மாணவ, மாணவிகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
படிப்படியாக மற்ற வகுப்புகள்...
மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை திறப்பது கட்டாயம். அதன்படி கர்நாடகத்தில் தற்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், கர்நாடகத்தில் மாணவர்களின் நலன் கருதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் பெரும்பாலான மாவட்ட்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story