நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல்


நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல்
x
தினத்தந்தி 22 Aug 2021 5:12 PM IST (Updated: 22 Aug 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளனர்.

போடிப்பட்டி,
நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளனர்.
மகசூல் இழப்பு
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெற்பயிரில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 
இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது
தாய் அந்துப்பூச்சி நெற்பயிரின் இளம் இலைகளின் நரம்புப் பகுதிக்கு அருகில் 10 முதல் 12 முட்டைகளை வரிசையாக இடும். இவ்வாறு ஒரு அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 300 முட்டைகள் வரை இடும்.இந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் சுருட்டப்பட்ட இலைகளுக்குள் இருந்து கொண்டு இலைகளின் அடிப்பகுதியிலுள்ள பச்சையத்தை சுரண்டி உண்ணும். இதனால் இலைகள் வெளிறி காய்ந்து விடும். இவ்வாறு ஒரு புழு 4 முதல் 7 இலைகளை தின்னும் வாய்ப்பு உள்ளது.
பயிர் சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முதலிடம் பிடிப்பது அவை பல்கிப் பெருகுவதற்கான சூழலை மாற்றுவதாகும். அதன்படி இலைச் சுருட்டுப் புழுக்களை உருவாக்கக் கூடிய தாய் அந்துப் பூச்சிகள் நெல் பயிரின் இலைகளில் மட்டுமல்லாமல் களைச்செடிகளாக முளைத்துள்ள புல், பூண்டுகளிலும் முட்டையிட்டு பெருகுகிறது. 
நன்மை தரும் பூச்சிகள்
அதிகமான தழைச்சத்து பயிர் பசுமையை அதிகரித்து புழு வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே யூரியா உள்ளிட்ட தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில், பரிந்துரைக்கப்பட்ட நேரங்களில் இட வேண்டும். தழைச்சத்து உரங்களை 3 ஆக பிரித்தும், வேப்பம்புண்ணாக்குடன் கலந்தும் இடுவது சிறந்தது. மேலும் 5 ஏக்கருக்கு 1 என்ற எண்ணிக்கையில் விளக்குப் பொறியை வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
வயல்வெளிகளில் இயற்கையாகவே காணப்படும் நன்மை தரும் பூச்சிகளான நீள்கொம்பு வெட்டுக்கிளிகள், ஒட்டுண்ணிக் குழவிகள், தரை வண்டுகள், நீர்த்தாண்டி, இடுக்கிவால் பூச்சிகள், தட்டான்கள் போன்றவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். மேலும் நடவு செய்த 37, 44 மற்றும் 51 வது நாட்களில் டிரைகோரமா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் வயலில் விடலாம். இதுதவிர 5 சதவீத வேப்பங் கொட்டைச் சாறு அல்லது 3 சதவீத வேப்ப எண்ணெய் தெளித்தும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
=====================


Next Story