தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சினிமா தியேட்டர்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சினிமா தியேட்டர்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Aug 2021 5:24 PM IST (Updated: 22 Aug 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

சினிமா தியேட்டர்களை திறந்து இன்று (திங்கட்கிழமை) முதல் திரைப்படங்களை திரையிட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சினிமா தியேட்டர்களை திறந்து இன்று (திங்கட்கிழமை) முதல் திரைப்படங்களை திரையிட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் ஏராளமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பேரில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத்தொடங்கி உள்ளது.
இதனால் அரசு, ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. அதனையும் திறப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வழக்கம் போல் திறக்க உள்ளன.
சுத்தம் செய்யும் பணி
அதே போன்று சினிமா தியேட்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 19 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களை திறந்து சினிமா காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், நேற்று காலை முதல் சினிமா தியேட்டர்களை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். 
தியேட்டர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். ஒவ்வொரு இருக்கையாக சுத்தம் செய்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் ஒரு இருக்கை காலியாக விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

Next Story