தியேட்டர்களை தயார்படுத்தும் பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டத்தில் தியேட்டர்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. டிக்கெட் கட்டணம் உயராது என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தியேட்டர்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. டிக்கெட் கட்டணம் உயராது என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.
தியேட்டர்கள் இயங்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் தியேட்டர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் இன்று திங்கட்கிழமை முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கும் பணி மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் சுத்தம் செய்யும் பணி நேற்று பல தியேட்டர்களில் நடந்தது.
1,112 தியேட்டர்கள்
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது
தமிழகத்தில் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இதில் கோவை மண்டலத்தில் 168 தியேட்டர்களும், கோவை மண்டலத்தில் ஒரு அங்கமாக உள்ள திருப்பூர் மாவட்டத்தில் 56 தியேட்டர்களும் உள்ளன. அரசு வழிகாட்டுதலின் படி தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படும்.
தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. வழக்கமான காட்சிகள் இருக்கும். பொதுமக்களின் வருகையை பொறுத்து காட்சிகள் மாற்றி அமைக்கப்படும்.
டிக்கெட் கட்டணம் உயராது
தியேட்டர்களுக்கு கடந்த ஊரடங்கு தளர்வின் போது பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு தந்தனர். அதுபோல் இந்த முறையும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.
டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளதால், பொதுமக்கள் அச்சமின்றி திரையங்கிற்கு வந்து தங்களுக்கு பிடித்த படங்களை பார்த்து ரசிக்கலாம். கொரோனா பாதிப்பு மேலும் குறையும் நிலையில் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர் இயங்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
-
திருப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் உள்ள இருக்கைகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது எடுத்தபடம்.
Related Tags :
Next Story