பள்ளிப்பட்டில் வாரச்சந்தை மூடப்பட்டதால் சாலையோரத்தில் விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள்
பள்ளிப்பட்டில் வாரச்சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் சாலையோரத்தில் விற்பனையில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு பேரூராட்சி அலுவலகம் அருகிலேயே வாரச்சந்தை மைதானம் அமைக்கப்பட்டு அதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
இந்த வாரச்சந்தைக்கு பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மட்டுமல்லாது அருகாமையில் உள்ள ஆந்திர விவசாயிகளும் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை கொண்டு வந்து விற்று வந்தனர். கொரோனா தொற்று காரணமாக பள்ளிப்பட்டு வாரச்சந்தை மைதானம் பல மாதங்களுக்கு முன் மூடப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்வது என்று தெரியாமல் தவித்தனர். இந்த நிலையில் ஒரு சில விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை தெருமுனையில் கடைகளை போட்டு விற்பனை செய்தனர். இதை கண்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை தமிழக எல்லையோரம் சாலைகளின் இருபுறமும் கடைகளை போட்டு விற்பனையை தொடங்கினார்.
தொடக்கத்தில் மந்தமாக நடைபெற்ற வியாபாரம் தற்போது நல்ல முறையில் நடந்து வருகிறது. பொதுமக்களும் தரமான காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கிய மகிழ்ச்சியில் வீடு திரும்புகின்றனர்.
Related Tags :
Next Story