நிலத்தகராறில் முதியவர் அடித்துக்கொலை
சேவூர் அருகே நிலத்தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேவூர்
சேவூர் அருகே நிலத்தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
முதியவர்
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த சேவூர் ராமியம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவருடைய மனைவி இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார். இவருடைய தங்கை பொன்னம்மாள்70. இவருடைய கணவரும் இறந்து விட்டதால் அண்ணன் வெங்கடாசலத்துக்கு உதவியாக இருந்து வந்தார். மேலும் பொன்னம்மாள் ஆடு மேய்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு அண்ணனை கவனித்து வந்தார்.
நேற்று காலையில் வழக்கம் போல் ஆடுகள் மேய்க்க பொன்னம்மாள் காட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வெங்கடாச்சலத்தை காணவில்லை. மேலும் வீட்டின் வாசலில் ரத்தக்கறை படிந்து இருந்தது. ரத்தக்கறையானது வெங்கடாசலம் வீட்டின் வாசலில் இருந்து பக்கத்து வீட்டை சேர்ந்த ராசு என்பவரின் மகன் சந்தோஷ் 25 வீட்டின் வாசல் வரை உறைந்து கிடந்தது. மேலும் சந்தோஷ் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னம்மாள் இது குறித்து சேவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தோஷ் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு சமையல் அறையில் வெங்கடாசலம் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய தலையில் பலத்த காயம் இருந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது, வெங்கடாச்சலம் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதையடுத்து வெங்கடாச்சலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வெங்கடாசலத்திற்கும், சந்தோசுக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வெங்கடாசலம் பல முறை சேவூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இருவரையும் பலமுறை அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுமேய்க்க பொன்னம்மாள் சென்றபோது வீட்டில் வெங்கடாசலம் தனியாக இருந்துள்ளார். அப்போது சந்தோஷ் அங்கு சென்று வெங்கடாசலத்தை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய கை மற்றும் கால்களை கட்டி இழுத்து சென்று தனது வீட்டின் சமையல் அறையில் உடலை வைத்து விட்டு தப்பி சென்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள சந்தோசை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story