அரிசி ஆலை சாம்பலில் விழுந்த மாணவன் சாவு


அரிசி ஆலை சாம்பலில் விழுந்த மாணவன் சாவு
x
தினத்தந்தி 22 Aug 2021 10:41 PM IST (Updated: 22 Aug 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி ஏரியில் கொட்டிய அரிசி ஆலை சாம்பலில் விழுந்த மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக டிராக்டர் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). இவருடைய மகன் வெங்கடேஷ் (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 
சம்பவத்தன்று வெங்கடேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக ஏமப்பேர் ஏரிக்கு ஓட்டிச் சென்றான்.
அப்போது ஏரியில், அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து வாகனங்கள் மூலம் சுடு சாம்பல் கொண்டுவரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த சுடு சாம்பலில் வெங்கடேஷ் தவறி விழுந்தான். 
இதில் அவனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. 
அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

போலீசார் விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.  
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். 
இது குறித்த புகாரின் பேரில் ஏரியில் சுடு சாம்பலை கொட்டியது தொடர்பாக ஏமப்பேரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரான சிவா என்பவர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story