செயற்கை மணல் தயாரித்தால் குண்டர் சட்டத்தில் கைது. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டால் அல்லது செயற்கை மணல் தயாரிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டால் அல்லது செயற்கை மணல் தயாரிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணல் கடத்தல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தனிப்படைகள் அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல்வேறு இடங்களில் மாட்டு வண்டிகள் மற்றும் பல்வேறு வகைகளில் மணல் கடத்தல்களிலும், விவசாய நிலங்களில் உள்ள வண்டல் மண்ணை வெட்டி எடுத்து சென்று காட்டுப் பகுதிகளில் மறைவான இடங்களில் செயற்கை மணலை தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
திடீர் ஆய்வு
இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கசிநாயக்கன்பட்டி, நாட்டறம்பள்ளி, காக்கங்கரை, கந்திலி மற்றும் வாணியம்பாடி, ஆம்பூர், பொன்னேரி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு செயற்கை மணல் தயாரிக்க கட்டப்பட்டிருந்த மணல் தொட்டிகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடைக்க உத்தரவிட்டார், மேலும் அங்கிருந்த மின் மோட்டார்கள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குண்டர் சட்டத்தில் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் மணல் கடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
சில சமூக விரோத கும்பல் செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். மணல் கடத்தல் மற்றும் செயற்கை மணல் தயாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். மணல் கடத்தல் மற்றும் செயற்கை மணல் தயாரிப்பவர்கள் மீது புகார் செய்ய மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story