தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து; டிரைவர் பலி


தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து; டிரைவர் பலி
x
தினத்தந்தி 22 Aug 2021 11:50 PM IST (Updated: 22 Aug 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை,
கார் டிரைவர்
குளித்தலை பெரியார் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 44). இவர் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனது அண்ணன் பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான டயர் விற்கும் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குளித்தலையில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மேலூருக்கு சென்றுவிட்டு மீண்டும் சனிக்கிழமை அவர் தனது வீட்டுக்கு வருவது வழக்கம். 
அதுபோல நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல மேலூரிலிருந்து குளித்தலை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அவருடன் 2 ஊழியர்கள் வந்தனர். அவர்களை தோகைமலை மில் பகுதியில் இறக்கிவிட்டு விட்டு பின்னர் குளித்தலை நோக்கி மாதவன் சென்று கொண்டிருந்தார்.
தடுப்பு சுவரில் மோதியது
குளித்தலை அருகே உள்ள தேசியமங்கலம் பகுதியில் உள்ள வளைவான சாலையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்றது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story