தமிழகத்தில் இதுவரை 2¾ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் இதுவரை 2¾ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2021 11:59 PM IST (Updated: 22 Aug 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை 2¾ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

காரைக்குடி,

தமிழகத்தில் இதுவரை 2¾ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கானல் அறக்கட்டளை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கானல் கண் மருத்துவ சேவையின் தலைவர் அழகப்பன் வரவேற்றார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆக்சிஜன் கொள்கலன் பயன்பாட்டினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2¾ கோடி பேர்
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை பெருமளவில் இருந்தது.இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையினால் தற்போது ஆக்சிஜன் இருப்பு 989 கே.எல். அளவுக்கு தினசரி கையிருப்புக்கான வசதி உள்ளது. தன்னார்வலர்கள் அளித்த 17 ஆயிரத்து 940 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. 210 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 47 இடங்களில் பணி நிறைவுற்று பயன் பாட்டிற்கு வந்து உள்ளது.
 தற்போது கொரோனா 3-வது அலை உள்ளிட்ட எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவிற்கு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 பேர் ஆவார்கள்.

இந்தியாவிலேயே முதன்முறை

 தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் சென்னையில் தொடங்கி வைத்துள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் இந்த 24 மணி நேர தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும். காரைக்குடியில் இத்திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாங்குடி எம்.எல்.ஏ.வின் வேண்டுகோளை ஏற்று காரைக்குடியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை மேலும் நவீன வசதிகளோடு தொடர்ந்து செயல்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 16 நாட்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 55 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடிகளாரை சந்தித்த அமைச்சர்

முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியன் வரும் வழியில் கானாடுகாத்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் குன்றக்குடி ஆதீன திருமடம் சென்ற அமைச்சர் சுப்பிரமணியன் குன்றக்குடி அடிகளாரை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அமைச்சருக்கு அடிகளார் அவர் எழுதிய அன்பே தவம் என்ற புத்தகத்தை பரிசளித்தார்.

Next Story