புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே இயற்கை எழில்கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.
அதன்படி, கடந்த சில தினங்களாகவே பெரும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சுற்றுலா பயணிகள் பலரும் அருவி பகுதிக்கு சென்று வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமுருகன் தலைமையிலான போலீசார் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதைக்கு வந்தனர். அப்போது குளிப்பதற்காக நீர்வீழ்ச்சிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story