ஏற்காட்டில் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி


ஏற்காட்டில் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2021 1:07 AM IST (Updated: 23 Aug 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டுக்கு தடையை மீறி சுற்றுலா வந்துவிட்டு திரும்பியபோது வேன் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏற்காடு, ஆக.23-
ஏற்காட்டுக்கு தடையை மீறி சுற்றுலா வந்துவிட்டு திரும்பியபோது வேன் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
தடையை மீறி சுற்றுலா
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா வந்து செல்கிறார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 
இதனால் ஏற்காடு அடிவார பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து, சுற்றுலா வருபவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். தடையை மீறி சிலர் ஏற்காட்டுக்கு செல்வதும் நடந்து வருகிறது.
வேன் கவிழ்ந்தது
இந்தநிலையில் நேற்று புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளை சேர்ந்த 17 வாலிபர்கள் சுற்றுலா வேன் ஒன்றில் ஏற்காட்டுக்கு வந்தனர். அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் மாலை அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அதன்படி அவர்கள் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் மலைப்பாதை வழியாக வேனில் சென்றனர். வாழவந்தி பகுதியில் ராமர் கோவில் பக்கமாக சென்றபோது, வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதிலிருந்த வாலிபர்கள் அலறினர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேனின் அடியில் சிக்கி கடலூரை சேர்ந்த வேணு மகன் ரமேஷ் (வயது 25) என்பவர் பலியானது தெரியவந்தது. மேலும், வேன் டிரைவர் முத்துகுமார் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வாழவந்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வந்தது எப்படி?
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரமேசின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்ல தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனை மீறி வாலிபர்கள் வேனில் சுற்றுலா வந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story