குப்பைமேடாக காட்சியளிக்கும் அரசு பள்ளி வளாகம்
அரியலூரில் குப்பை மேடாக காட்சியளிக்கும் அரசு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
மூடப்பட்ட பள்ளிகள்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கொரோனா 2-வது அலை பரவலை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 3 மாதங்களாக காய்கறி மொத்த விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வந்தன. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இதையடுத்து பள்ளி மைதானத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு, மீண்டும் நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
குப்பை மேடு போல்...
இந்நிலையில் மைதானத்தில் கடைகள் செயல்பட்டபோது, காய்கறிகள் வாங்க வருபவர்கள் வரிசையில் நிற்பதற்காக கட்டப்பட்ட தடுப்புக்கட்டைகள் இதுவரை அகற்றப்படவில்லை. மேலும் மைதானம் மேடு, பள்ளமாக உள்ளது. பள்ளி வளாகங்கள் பல இடங்களில் குப்பை மேடு போல் காட்சியளிக்கின்றன. பல வகுப்பறைகள் திறக்கப்படாததால் வாசலில் முட்செடிகள் வளர்ந்துள்ளன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், நுழைவுவாயிலில் உள்ளதால் அந்தப் பகுதி மட்டும் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற அனைத்து இடங்களும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது.
கோரிக்கை
தற்போது வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதலான வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. ேமலும் மற்ற வகுப்புகளை செப்டம்பர் 15-ந் தேதிக்கு பிறகு திறக்க ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கவனிப்பாரற்று கிடக்கும் பள்ளி வளாகம் முழுவதையும் ஆசிரியர்கள் தங்களது மேற்பார்வையில் பணியாளர்களை வைத்து சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story