காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த கணவர்
காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளுக்கு பின்னர் பெரம்பலூரில் கணவர் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
பெரம்பலூர்:
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்...
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை தீரன் நகரில் உள்ள கருணை இல்ல நிர்வாகிகள் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி மீட்டு, தங்களது இல்லத்தில் சேர்த்து பராமரித்து வந்தனர். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு மேலாக கருணை இல்ல பராமரிப்பில் இருந்த அந்த பெண் கடந்த மாதம் மனநல பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரம் குறித்து, அவரிடம் பெரம்பலூர் போலீசார் விசாரித்தனர்.
இதில் அந்த பெண்ணின் பெயர் சுனிதா என்ற லெட்சுமி (வயது 45) என்பதும், தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், மெட்பாலிமண்டல் ஜகசாகரை சேர்ந்த நரசய்யாவின் மனைவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லெட்சுமியின் புகைப்படம் போலீசார் மூலம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு அனுப்பி, அவர் கூறிய தகவல்கள் சரியானதுதானா என்று விசாரணை நடத்த போலீசார் அறிவுறுத்தினர்.
கணவரிடம் ஒப்படைப்பு
அதனை தொடர்ந்து குற்ற ஆவண காப்பக போலீஸ் இன்ஸ்பெக்டர் தாஹீரா தலைமையிலான குழுவினர், லெட்சுமியின் புகைப்படத்தை தெலுங்கானா மாநில போலீசாருக்கு அனுப்பி விசாரித்தனர். அப்போது லெட்சுமி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது. மேலும் அவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், இதனால் லெட்சுமி மாயமாகி விட்டதாக, அவரது கணவர் நரசய்யா உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நரசய்யாவுக்கு தகவல் தெரிவித்து, அவரை பெரம்பலூர் வரவழைத்தனர். அதன்படி பெரம்பலூருக்கு நேற்று வந்த நரசய்யாவிடம், அவரது மனைவி லெட்சுமியை, கருணை இல்ல நிர்வாகி அனிதா அருண்குமார் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது கணவரும், மனைவியும் 11 ஆண்டுகள் கழித்து கண்ட மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தது, மற்றவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இதையடுத்து நரசய்யா போலீசாருக்கும், கருணை இல்ல நிர்வாகிக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு, லட்சுமியை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
இறுதிச்சடங்கு
இதற்கிடையே பெரம்பலூரில் உயிருடன் இருந்த லெட்சுமியை இறந்துவிட்டதாக கருதி, மற்றொரு பெண்ணின் உடலுக்கு நரசய்யா இறுதிச்சடங்கு செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது நரசய்யா, லெட்சுமி காணாமல் போய்விட்டதாக 11 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அப்போது அந்தப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஒரு பெண் இறந்து கிடந்ததாகவும், அது நரசய்யாவின் மனைவியாக இருக்கலாம் என்றும் கருதி, அந்த பெண்ணின் உடலை நரசய்யாவிடம் உள்ளூர் போலீசார் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலுக்கு நரசய்யா இறுதி சடங்கு செய்ததாக, பெரம்பலூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் லெட்சுமி வீட்டில் இருந்தபோது மூத்த மகளுக்கு திருமணம் செய்த நரசய்யா, லெட்சுமி காணாமல் போன பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சம்பாதித்து, மற்ற 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் லெட்சுமி உயிருடன் பெரம்பலூரில் வாழ்ந்து வந்த தகவல், நரசய்யாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவர், லெட்சுமியிடம் 11 ஆண்டுகள் கழித்து மகள்களின் புகைப்படத்தை காண்பித்த போது, அவர் அந்த புகைப்படத்தை முத்த மழையில் நனைத்தார்.
Related Tags :
Next Story