பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை


பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை
x
தினத்தந்தி 23 Aug 2021 2:48 AM IST (Updated: 23 Aug 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே பட்டதாரி வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு:

குத்திக்கொலை

  பெங்களூரு புறநகர் மாவட்டம் சோழதேவனஹள்ளியில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(வயது 26). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். நேற்று முன்தினம் இரவு ரவிக்குமார் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது ரவிக்குமாரை வழிமறித்த மர்மநபர்கள் அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியை எடுத்து ரவிக்குமாரை சரமாரியாக குத்தினர். இதில் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அறிந்ததும் சோழதேவனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

  ஆனால் ரவிக்குமாரை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. ரவிக்குமாருக்கும், சிலருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணப்பிரச்சினையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

  இருப்பினும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் ரவிக்குமாரை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story