சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 10 டி.எம்.சி. கையிருப்பு ; குடிநீர் வினியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 10 டி.எம்.சி. நீர் கையிருப்பு இருப்பதால் சென்னைக்கான குடிநீர் வினியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 டி.எம்.சி. கையிருப்பு
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தற்போது தினசரி 564 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர கால்வாய்கள் மூலம் 85 கன அடி உள்பட 649 கன அடி நீர் பூண்டி ஏரிக்கு வருகிறது.அதன்படி பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 276 மில்லியன் கன அடி (2.2 டி.எம்.சி.), சோழவரம் ஏரியில் 616 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 673 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 486 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 491 மில்லியன் கன அடி (2.4 டி.எம்.சி.) மற்றும் வீராணம் ஏரியில் 1,212 மில்லியன் கன அடி உள்பட 9 ஆயிரத்து 754 மில்லியன் கன அடி (9.7 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 5 ஆயிரத்து 568 மில்லியன் கன அடி (5.6 டி.எம்.சி.) மட்டுமே இருப்பு இருந்தது. ஆனால் நடப்பாண்டு நீர் இருப்பு அதிகரித்து உள்ளது.
குடிநீர் வினியோகம் அதிகரிக்க திட்டம்
சென்னை மாநகரருக்கு ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படுகிறது. ஏரிகளில் குடிநீர் இருப்பு அதிகரித்து இருப்பதால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகத்தை 903 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளையும் சேர்த்து 10 டி.எம்.சி. நீர் இருப்பு இருப்பதால் அடுத்த 10 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இதுதவிர வடகிழக்கு பருவமழை மூலமும் ஏரிகளுக்கு நீர் வர வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி தான் சேமிக்க முடியும். ஆனால் தற்போது 10 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் 903 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story