தூத்துக்குடி அருகே சிமெண்டுஆலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு


தூத்துக்குடி அருகே  சிமெண்டுஆலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 5:11 PM IST (Updated: 23 Aug 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சிமெண்டு ஆலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே சிமெண்டு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நேற்று பல்வேறு அமைப்பினர் மனு கொடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
சிமெண்டு தொழிற்சாலை
தூத்துக்குடி அருகே உள்ள எஸ்.கைலாசபுரம் கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் கைலாசபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் மக்கள் வசித்து வரும் பகுதிக்கு மிகவும் அருகே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சிமெண்டு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தபோது கிராம மக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.கைலாசபுரம் கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 200 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கும் நீரேற்று நிலையம் அமைந்து உள்ளது. இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் வாய்ப்பு இருப்பதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த தொழிற்சாலையால் ஏற்படும் அதிகப்படியான மாசு காற்றில் கலந்து இந்த பகுதி மக்களுக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சுவாச பிரச்சினைகளும் ஏற்படும். எனவே அந்த பகுதியில் சிமெண்டு ஆலை அமைப்பதற்கான உரிமம் வழங்குவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவாகும். இந்த திருவிழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, 12-ந் தேதி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பதற்கு முடிவு செய்து உள்ளோம். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசு வகுத்துள்ள கொரோனா நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் நேருஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் முருகன், வ.உ.சி. துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் காசி, உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரன், டென்சிங் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு 7-வது ஊதியக்குழு முடிவின்படி கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆபரேட்டர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகை வழங்க வேண்டும். கொரோனா முன்களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு தூய்மை காவலர்களுக்கும் சிறப்பு ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஆணை வழங்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, தென்மண்டல அமைப்பாளர் கொம்பையா மற்றும் அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கொடுத்த  கோரிக்கை மனுவில், “தொழிலாளர், தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறித்து நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், உப்பள தொழிலாளர்களுக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், மீனவர் மற்றும் மீன்சார்பு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட பணப்பயன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சலவைத்தொழிலாளர்களால் நடத்தப்பட்டு வரும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து வண்ணார்பேட்டை திருக்குறிப்புதொண்டர் நாயனார் ஆரம்ப பள்ளியில் சத்துணவு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
பஸ் வசதி
தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், “கோவில்பட்டியில் இருந்து ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிலுக்கன்பட்டி, சாயர்புரம், ஏரல் வழியாக உவரிக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு உபயோகமாக இருந்தது. இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம், பண்ணைவிளை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி, ஏரல், சாயர்புரம், முடிவைத்தானேந்தல், வாகைகுளம் வழியாக பேரூரணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

Next Story