ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு ஊருணி கரை உடைப்பு


ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு ஊருணி கரை உடைப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 7:21 PM IST (Updated: 23 Aug 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் பகுதியில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊருணி கரை உடைப்பு ஏற்பட்டது.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் பகுதியில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊருணி கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கரையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், மணியாச்சி, புளியம்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திடீரென பெய்த இந்த பலத்த மழையில் புளியம்பட்டி அருகே  கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊருக்கு மேற்கு உள்ள ஊருணி கரை  உடைப்பு ஏற்பட்டது.
இதனால் ஊருணியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கின்றன. எனவே ஊருணியின் கரையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முத்தையாபுரம்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் அத்திமரப்பட்டி பகுதியில் நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் அந்தப் பகுதியில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இந்த மழையால் இப்பகுதியில் பயிரிடப்பட்டு வாழை கன்றுகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள முத்தையாபுரம் பகுதியில் பெய்த மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலையில் குட்டை போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

Next Story