கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 52 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது 5 பேர் தப்பி ஓட்டம்
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில், கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே, கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமா தலைமையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்ததும், அங்கு பதுங்கி இருந்த 6 பேர் தாங்கள் வைத்து இருந்த 2 சாக்கு மூட்டைகளை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதற்குள் தலா 2 கிலோ வீதம் 26 பண்டல்களில் 52 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது-வலைவீச்சு
இதற்கிடையே தப்பி ஓடியவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 5 பேரும் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 24) என்றும், தப்பியோடியவர்கள் புதுப்பட்டியை சேர்ந்த சுந்தர், முத்துப்பாண்டி, பரத், புகழ், அன்பழகன் என்றும் தெரிவந்தது.
இவர்கள் 6 பேரும் சேர்ந்து, கம்பத்தில் இருந்து 52 கிலோ கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுந்தர் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story