5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி தொடங்கியது


5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Aug 2021 10:16 PM IST (Updated: 23 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி தொடங்கியது. பூங்காக்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கொடைக்கானல்:

  பூங்காக்கள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், படகு குழாம்கள் மூடப்பட்டன. 

இந்தநிலையில் நோய்த்தொற்று குறைந்ததன் எதிரொலியாக, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் படகு குழாம்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதன் எதிரொலியாக, ‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை நேற்று காலை 9 மணி முதல் திறக்கப்பட்டன.

மேலும் கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில், எழில்கொஞ்சும் வகையில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி தொடங்கியது. 

அந்த ஏரியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகுகள் இயக்கப்பட்டன. பல்வேறு வடிவங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட படகுகள் நட்சத்திர ஏரியில் வலம் வந்தன.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

 5 மாதங்களுக்கு பிறகு படகு சவாரி தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். தரை இறங்கிய மேக கூட்டத்துக்கு மத்தியில் நண்பர்கள், குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

படகு சவாரி தொடக்கம் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. பூங்காக்களில் பூத்துக்குலுங்கிய பூக்கள், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.

அதேநேரத்தில் வனப்பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான பில்லர் ராக்ஸ், குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பேரிஜம் ஏரி, மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம் ஆகிய இடங்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

 நகராட்சி படகு குழாம்

பூங்காக்களை பார்த்து ரசித்து விட்டும், படகு சவாரி செய்து விட்டும் ஒரே நாளில் கொடைக்கானலில் இருந்து சுற்றுலா பயணிகள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நட்சத்திர ஏரியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான படகு குழாம் செயல்படவில்லை. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர். எனவே அந்த படகு குழாமை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Next Story