நீலகிரி- கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்
நீலகிரி-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்
நீலகிரி-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து மே மாதம் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக கர்நாடகா, கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வரத்து முழுமையாக குறைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் கூடுதல் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, வருகிற 1-ந் தேதி 9 முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், தமிழக-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு பிறகு தொடக்கம்
இதன் காரணமாக கர்நாடகாவில் இருந்து நேற்று முதல் தமிழகத்துக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. நீலகிரி- கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை 10 மணிக்கு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் கர்நாடக அரசு பஸ் வந்தது.
பின்னர் முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்றது. கடந்த காலங்களில் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது.
வியாபாரிகள் மகிழ்ச்சி
தற்போது கர்நாடகாவில் இருந்து அரசு பஸ்கள் தமிழகத்துக்குள் வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டுமா என்ற அறிவிப்பு வெளியாகாததால் மாநில எல்லைகளில் முறையான சோதனை நடைபெறுவதில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து வரும் அரசு பஸ் பயணிகள் எந்தவித தணிக்கைக்கு உள்ளாகாமல் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.
இது சம்பந்தமாக சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, பஸ் பயணிகள் கொரோனா இல்லை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனிடையே தமிழக-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story