காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி தேவாலா பஜாரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அட்டி, பிழா மூலா, வாழவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஊருக்குள் புகும் காட்டு யானைகள் மளிகை கடைகள், வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இவ்வாறு சேதமடையும் கட்டிடங்களுக்கு வனத்துறை சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்படுவது இல்லை. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தின
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிழாமூலா பகுதியில் காட்டு யானைகள் புகுந்தன. இந்த காட்டு யானைகள் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோரியும், வனத்துறையினரை கண்டுத்தும் தேவாலா பஜாரில் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் அறிவித்தனர்.
சாலை மறியல்
இதன்படி அட்டி, வாழவயல், பிழாமூலா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு தேவாலாவில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவா்கள் ஊர்வலமாக தேவாலா பஜாருக்கு வந்தனர்.
பின்னர் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்தும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடலூர்- கோழிக்கோடு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவலறிந்த கூடலூர் தாசில்தார் சிவக்குமார், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், வன சரகர் பிரசாத் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனால் ஏராளமான பெண்கள் சாலையில் அமர்ந்து இருந்தனர்.
இதனால் தேவாலா போலீஸ் நிலையத்தில் போராட்ட குழுவை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளை அழைத்து தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், தேவாலா பஜாரில் பெண்கள் சாலையோரத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் ஒருபுறமாக போக்குவரத்து தொடங்கியது. தேவாலா பஜாரில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வன அலுவலர் உறுதி
இதனிடையே கூடலூர் வன அலுவலர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் போராட்ட குழுவை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த வீடுகளை சீரமைக்க உரிய நிதி ஒதுக்கப்பட்ட உடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story