7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்


7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:00 PM IST (Updated: 23 Aug 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

கடும் விலை வீழ்ச்சியால் 7 டன் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் அதனை பொதுமக்களுக்கு வியாபாரிகள் இலவசமாக வழங்கினர்.

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம்  உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
 ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம்இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை.
 இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குேடானில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி வந்தது. 

இலவசம்

 இதனால் மனவேதனை அடைந்த வியாபாரிகள், அந்த வெண்டைக்காய்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று 4 மினிலாரிகளில் வெண்டைக்காயை வியாபாரிகள் ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு வந்தனர்.
 பின்னர் அவர்கள் கூவி, கூவி அந்த வெண்டைக்காயை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் இன்ப அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வெண்டைக்காயை துண்டு, பாலித்தீன் பை உள்ளிட்டவற்றில் வாங்கி சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், விவசாயிகளிடம் இருந்து வெண்டைக்காயை கிலோ ரூ.5-க்கு வாங்கி, அதனை வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்ய இருந்தோம். 

நஷ்டம்

ஆனால் எதிர்பாராத விதமாக வரத்து அதிகரிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக வெண்டைக்காய் விலை தற்போது கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதன் காரணமாக நாங்கள் வாங்கிய வெண்டைக்காயை கிலோ ஒன்றுக்கு ரூ.1-க்கு கூட வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து அரசுக்கு தெரிவிக்கவும், யாருக்கும் பயனின்றி வீணாகப்போவதை தடுக்கவும் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். 

Next Story