மாவட்டத்தில் தியேட்டர்கள் திறப்பு
4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. புதிய படங்கள் வெளியாகாததால் குறைந்தளவே ரசிகர்கள் வந்திருந்தனர்.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வில் ஆகஸ்டு 23-ந் தேதி (அதாவது நேற்று) முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து 50 சதவீத பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி கடந்த 4 மாதங்களாக பூட்டிக்கிடந்த சினிமா தியேட்டர்களை திறந்து கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 60 சினிமா தியேட்டர்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் 50 சதவீத பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் இருக்கையையும் தயார்படுத்தினர்.
புதிய படங்கள்
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் பல இடங்களில் நேற்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களும் நேற்று காலை திறக்கப்பட்டன. ஆனால் புதிய படங்கள் ஏதும் வெளியிடப்படாததால், தியேட்டர்களுக்கு நேற்று குறைந்தளவே ரசிகர்கள் படம் பார்க்க வந்திருந்தனர்.
பிறகு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டதும், கைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய தியேட்டர் ஊழியர்கள் அறிவுறுத்தினர். அதன்பிறகு காலை 11 மணிக்கு அனைவரும் தியேட்டருக்குள் சென்று உற்சாமாக படம் பார்க்க சென்றனர்.
வெறிச்சோடிய தியேட்டர்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதிலும், புதிய படங்கள் ஏதும் திரையிடப்படாததால் பெரும்பாலான தியேட்டர்கள் பார்வையாளர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியே கிடந்தன.
இந்நிலையில் கடலூரில் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று நடிகர் விஜய் படம் திரையிடப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் பச்சையப்பன், நகர தலைவர் சாரதி மற்றும் நிர்வாகிகள் முககவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
இதேபோல் விருத்தாசலத்திலும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இந்த தியேட்டர்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா? என்று தாசில்தார் சிவக்குமார் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story