கண்களில் கருப்பு துணி கட்டி பாசன ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி பாசன ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 1:25 AM IST (Updated: 24 Aug 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

கண்களில் கருப்பு துணி கட்டி பாசன ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தா.பழூர்:

மதகுகள் பழுது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் 7 ஏக்கர் பரப்பளவில் ரெட்டபள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பொன்னாற்று பிரதான பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து சேரும். பின்னர் ஏரியின் 3 மதகுகள் வழியாக விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். ஏரியின் 3 பாசன மதகுகளும் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 பாசன மதகுகளும் தற்போது பழுதடைந்து உள்ளன. இதன் காரணமாக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களுக்கு சென்று வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் நிலை இருந்து வருகிறது. மேலும் தற்போது இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பழுதடைந்த மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதால் 450 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆடி பட்ட நாற்றங்கால் தயாரிப்பு பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழைக்காலம் வர உள்ளதால் அதற்குள் மதகுகளை சீரமைக்காவிட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று இப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
போராட்டம்
இதற்கிடையே 3 மதகுகளையும் புதிதாக கட்டித்தரக்கோரி, மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரெட்டபள்ளம் ஏரியில் இறங்கி கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மதகுகளை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர். மேலும் பாசன மதகை புதிதாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, அவர்கள் கூறினர்.

Next Story