நீச்சல் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி
வருகிற 1-ந் தேதி முதல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் நீச்சல் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
வருகிற 1-ந் தேதி முதல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் நீச்சல் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விளையாட்டு மைதானம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதிநகரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு மைதானம் 23 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
மேலும் வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள கால்பந்து மைதானம், ஆக்கி மைதானம், கைப்பந்து மைதானம், தடகள போட்டிக்கான இடங்கள், உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளன.
திறப்பு
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழகஅரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழகஅரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதல் விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டு, நடைபயிற்சிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், உடற்பயிற்சி கூடத்தில் 50 சதவீதம் பேர் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற விளையாட்டு போட்டிகளை நடத்தவும், பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம் மற்றும் உள்விளையாட்டு அரங்குகளில் விளையாட தடை தொடர்ந்தது.
நீச்சல் பயிற்சிக்கு அனுமதி
இந்தநிலையில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் வருகிற 1-ந் தேதி முதல் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.
நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் உள்விளையாட்டு அரங்குகளில் விளையாட இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, நாங்கள் எல்லா விளையாட்டிற்கும் அனுமதி அளிப்பது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறோம். உள்விளையாட்டு அரங்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டவுடன் அனைவரும் விளையாட அனுமதிக்கப்படுவர் என்றனர்.
Related Tags :
Next Story