கணவர் இறந்த துக்கத்தில் உயிரை துறந்த மனைவி


கணவர் இறந்த துக்கத்தில் உயிரை துறந்த மனைவி
x
தினத்தந்தி 24 Aug 2021 2:05 AM IST (Updated: 24 Aug 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் பாபுலால் (வயது 57). எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி சாந்தி (51). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  கடந்த 15 நாட்களுக்காக பாபுலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் பரிதாபமாக இறந்து விட்டார். கணவர் இறந்ததையறிந்து அதிர்ச்சியடைந்த சாந்தி, இரவு முழுவதும் துக்கம் தாங்காமல் அழுதபடியே இருந்தார். நேற்று காலை 9.30 மணி அளவில் பாபுலாலுக்கு இறுதிசடங்கு செய்யும் பணிகளை உறவினர்கள் தொடங்கினர்.

இதைப்பார்த்ததும் ஓடிவந்து கணவர் உடல் அருகே அமர்ந்த சாந்தி அப்படியே மயங்கி விழுந்து விட்டார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ‘தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை... நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்...’ என்ற சினிமா பாடலின் வரிகளுக்கு ஏற்ப தனது கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் மனைவியும் தனது உயிரை துறந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story