உப்பள்ளி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி


உப்பள்ளி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 24 Aug 2021 3:09 AM IST (Updated: 24 Aug 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி அருகே ஜன்னல் கம்பிகளை வெட்டி நுழைந்த மர்மநபர்கள் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் நகை-பணம் தப்பின.

உப்பள்ளி: உப்பள்ளி அருகே ஜன்னல் கம்பிகளை வெட்டி நுழைந்த மர்மநபர்கள் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் நகை-பணம் தப்பின.

கூட்டுறவு வங்கி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா சிவள்ளி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கர்நாடக விகாஸ் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வங்கியை ஊழியர்கள் பூட்டு விட்டு சென்றனர். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். 

அப்போது வங்கியில் இருந்த ஆவணங்கள் அங்கு சிதறி கிடந்தன. மேலும் வாடிக்கையாளர்களின் நகைகள், பணம் வைக்கப்பட்டு இருந்த லாக்கர் அறை திறந்து கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஜன்னல் கம்பிகளை வெட்டி...

மேலும் சம்பவம் பற்றி வங்கி மேலாளருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் வங்கிக்கு விரைந்து வந்தார். மேலும் அவர் உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பிகள் வெல்டிங் கட்டர் மூலம் துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஜன்னல் கம்பியை வெட்டி எடுத்து, அதன் வழியாக மர்மநபர்கள் வங்கிக்குள் நுழைந்ததும், பின்னர் லாக்கர் அறைக்குள் சென்றுள்ளனர். 

லாக்கரை உடைக்க முடியவில்லை

அங்கிருந்த லாக்கரை மர்மநபர்கள் திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் மீண்டும் வந்த வழியாகவே தப்பி ஓடியதும் தெரியவந்தது. 
மேலும் மர்மநபர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் நகை-பணம் தப்பியது. 

போலீஸ் விசாரணை

 மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதுபோல் மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

முன்னதாக வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பற்றி அறிந்ததும் வாடிக்கையாளர்களும், அந்தப் பகுதி மக்களும் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story